Friday, March 1, 2013

எனக்காக ப்ரே பண்ணிக்கோ

எத்தனையோ முறை கடந்து வந்திருந்தாலும்
எந்தச் சலனத்தையும் இதுவரையில் ஏற்படுத்தியதில்லை
'எனக்காக ப்ரே பண்ணிக்கோ" வார்த்தைகள்

எல்லா அலுவல்களுக்கிடையிலும் இன்று
எத்தனை எத்தனை முறை நினைக்க வைக்கின்றன
என் மேலுள்ள நம்பிக்கையின் அடையாளமாக
என்னை அன்பினால் உருக்குலைக்கும் ஒரு சொல்லாக

எல்லாமுமாய் அவள் நம்பும் கடவுளை விட
என் அன்பை அதிகம் நம்புகிறாள் என்றல்லவா
எண்ணத் தோன்றுகிறது

இரண்டாம் முறையாக அவள் சொன்ன இதே வார்த்தைகள்
இரண்டாயிரம் யுகமானாலும் கூட
இதே நினைவுகளை அழிக்காமல் வைத்திருக்கும்

இது போதுமெனக்கு
இனிமேலும் சொல்லிவிடாதே
இனியுமொரு இடமில்லை
நீ தரும் அன்பின் பாரங்களை சுமப்பதற்கு

இவளுக்காகத் தான் இந்த வரிகள் என்றும்,
இவள் சொல்லிய அந்த வார்த்தைகளையும்
இறைவனிடம் சொல்லிவிட வேண்டும்.

Friday, February 15, 2013

"பூபாளமும் முகாரியும்" தொடர் - 3 / எழுதுவது - அலெக்ஸ்







எங்கள் ஊரில் டிஜிட்டல் கேமராக்கள் இல்லாத காலம் அது. நொடிக்கு நொடி போட்டோ எடுத்து, முகப்புத்தகத்தில் பதிவேற்றிக் கொண்டிராத பருவம் அது. பழைய காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் உள்ள கால மாற்றங்களை, கடந்து வந்திருக்கும் தூரங்களை, வயதுகளின் வித்தியாசங்களை என எல்லாவற்றையும் நமக்கு உணர்த்திக் காட்டி, பிரிவின் சோகத்தை, குபீர் சிரிப்பை வரவழைப்பது புகைப்படங்கள் தான்.

குடும்பத்திற்குள் சண்டைகள் / பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும் தினங்கள் மட்டுமே எனக்கு விசேஷ தினங்கள். "இவ்வளவு பாசத்தையும் எங்கதான் ஒளிச்சு வச்சிருந்தாங்க" என்று அன்றைக்கு பாசமழை பொழியும் வீட்டில் உள்ள ஒவ்வொருத்தரையும் பார்த்துக் கேட்கத் தோன்றும். இதனாலோ என்னவோ அப்படிப்பட்ட தினங்களில் மட்டுமே, நாங்கள் போட்டோ ஸ்டூடியோக்கள் செல்வது வழக்கம்.

"என் புள்ளைக்கு கண்பட்டுவிடப் போகுதேன்னு " சொல்லிக்கொண்டே, தங்கைக்கு திருஷ்டி பொட்டு வைத்து, பூ வைத்து, ஸ்டுடியோ செல்ல ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார் அம்மா. "எனக்கும் பூ வச்சு விடும்மா" என்று கேட்டுக் கொண்டிருந்தேன். "ஆம்பளைப் பசங்க பூ வைக்கக் கூடாதுடா" என்ற சம்பிரதாய விளக்கம் வேறு. மணிரத்னம் பட வகை கேள்வி கேட்கும் குழந்தையாக நான் இல்லாததால், அந்த பதில்களை அப்படியே நம்பிக் கொண்டிருந்தேன். அப்போது முருகன் கோவிலுக்கு எதிரே உள்ள ஸ்டுடியோவில் போட்டோ எடுக்க, குடும்பம் குடும்பமாக கூட்டம் அலைமோதும். மருதாணியும், மல்லிகைப் பூ வாசனைகளும் சேர்ந்தாற்போல ஒரு நறுமணம் ஸ்டுடியோ முழுக்க விரவிக் கிடக்கும். பெல்பாட்டமும், ரெண்டு பை வச்சிருக்கிற சட்டையும், கலர் கண்ணாடியும் போட்டு யாராவது போட்டோ எடுக்கும்போது, "பாரீன்ல இருந்து வந்திருக்கிறார் போல" என்று அண்ணாந்து பார்ப்பேன்.

தலைநகரம் படத்தில் வடிவேலு போஸ் கொடுக்கும் ஸ்டைலில், என்னை தூக்கி வைத்துக் கொண்டு ஒரு ஸ்டில் எடுத்தார் என் முறுக்கு மீசை பெரியப்பா. "குதிரை அல்லது சேரில் உட்கார்கிற மாதிரி தான் என்னை போட்டோ எடுக்கணும்" என்று சொல்லி அடம் பிடித்து உருளுவேன். மாயி மாதிரி தரையில உட்கார்ந்து போஸ் கொடுப்பதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. "ஆனாலும் உன் பிள்ளைக்கு இவ்ளோ அடம் கூடாதுப்பா, கொஞ்சம்கூட பெத்தவங்க மேல பயமும் இல்ல, கீழ்படிதலும் இல்ல" என்று பெரியப்பா என்னைப் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். உண்மைதான். பள்ளிக் கல்வி முறைகளுக்குள் சிக்காதவரை எனக்கு பயமே இருந்ததில்லை. அப்படி அடம் பிடிச்சு, சாதிச்சு எடுத்த போட்டோக்களை இப்போது எதேச்சையாக பார்க்கும்போது, வாழ்க்கையில் நிறைய தூரங்களை கடந்துவிட்டதை உணர முடிகிறது. எந்தவொரு மன அழுத்தங்களும் இல்லாத நாட்களில், நான் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன் என்பதற்கு இந்தப் புகைப்படமே சான்று.

அந்தந்த வயதில் உள்ள அந்தந்த மனநிலைகளை, அப்படியே படம் பிடித்துக் காட்டுவதை, நினைவுகளை புரட்டிப் போடுவதில் உள்ள சுகத்தை, "இந்த இடத்தில இவன் அப்படி ஒரு கமெண்ட் அடிச்சான். அதான் நாங்க அப்படி சிரிச்சிருப்போம்"என்ற பதின்ம கால குறும்புகளை சிலாகிப்பதை, "அந்த ஸ்டில்ல ஒண்ணா சேர்ந்திருக்கிற நானும், பிரதீப்பும் அப்போ சண்டை போட்டிருந்தோம்" என்ற பிரிவிற்கான விளக்கத்தை, "எப்பவுமே இந்த இடத்துல இருந்துதான் நானும், அவளும் பேசுவோம்" என வெறுமையை காட்டுகின்ற நிழற்படத்தை, "ஹ்ம்ம். பழைய காலமெல்லாம் திரும்ப கிடைக்கவே கிடைக்காது" என்ற விரக்தியை, என இன்னும் நிறைய இருக்கின்ற எவ்வளவோ விஷயங்களை / ரகசியங்களை, தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கிறது புகைப்படங்கள்.

பள்ளியில் படிக்கும்போது வரை, புகைப்படங்களின் அருமை புரிந்ததே இல்லை. ஒவ்வொரு போட்டோவிற்கும், இவ்வளவு ரூபாய் என்று குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து கொண்டிருப்பார்கள் என்பதாலே, பெரும்பாலும் நான் வாங்கியதேயில்லை. ஏதாவது புகைப்படத்தை சட்டென்று பார்க்கும்போது,"ஏ ! இது அவள் தானே ? எவ்வளவு வித்தியாசம் இருக்கு இப்போ அவளைப் பார்க்கும் போது" என்று மனம் உணர்ச்சிக் குவியலாகிறது."இந்த டீச்சர் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும், ரொம்ப பாசமா இருப்பாங்க", "இந்த போட்டோவைப் பார்க்கும்போதெல்லாம் இந்த ப்ரதர் லாடம் கட்டினது தான் ஞாபகத்துக்கு வரும்", "இந்த வாத்தியார்தான் எனக்கு 50க்கு, 52மார்க்கு போட்டாரு" என எல்லா குரூப் போட்டோக்களிலும் ஏராளமான சுவராஸ்யங்கள் ஒளிந்திருக்கின்றன.

காலேஜில் நடைபெற்ற கிரிக்கெட் பைனலின் போது எடுக்கப்பட்ட குரூப் போட்டோக்களை விஜயராகவனின் பேஸ்புக்கில் பார்த்தேன்.அன்று "நட்பு, மச்சான்" என்று கொண்டாடியவர்கள், ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள், இன்று ஏதேதோ சூழல்களில், பிரிந்து போய், பேச்சு வார்த்தைகளைக் குறைத்துக் கொண்டு எக்கச்சக்கமாய் மாறிவிட்டார்கள். கால ஓட்டத்தில் மாறாமல், இன்னமும் அப்படியே நினைவுகளை சேமித்து வைத்திருக்கின்ற அந்தப் புகைப்படத்திற்கு லைக் போடும்போது, மனம் கொஞ்சம் பாரமானது. பழகிய நாட்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு அற்புதமானவை, இனிமையானவை என்று சிலாகிக்க வைத்துவிடுகிறது

எத்தனையோ கேமெராக்கள் வந்தாலும், யாராவது போட்டோ எடுக்குபோது, வெட்கங்களையும், படபடப்பையும் மறைத்து, இயல்பாக இருப்பதுபோல போஸ் கொடுப்பதென்பது எப்போதும் மிகச் சவாலான விஷயம். வெட்கப்படும் ஒரு பெண்ணின் முகம் மிக அழகா ? அன்பைக் குழைத்து, அமைதியான தெளிந்த நதி போல இருக்கும் ஒரு பெண்ணின் முகம் மிக அழகா ? எது மிக அழகு என்ற சில கேள்விகளில் மட்டும், புகைப்பட அழகின் உச்சம் எதுவென்று இன்னமும் கணிக்க முடியவில்லை. இப்போதெல்லாம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், திருமண விழாக்கள், அன்னதானங்கள், பிரிவு உபச்சார நிகழ்வுகள், அப்பாவான தருணங்கள், வெளிநாட்டிற்கு வழியனுப்பி வைத்தல் என எல்லா நிகழ்வுகளுக்கும், ரசித்து ரசித்து, புகைப்படங்களை எடுத்து நினைவுகளின் நீட்சிகளை கோர்க்க பழகியாயிற்று.

பொக்கிஷமாக ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக, மிகப் பிடித்தவர்களின் போட்டோ தேடி அலைந்த நாட்களும் உண்டு. ஒருவரிடமிருந்து பேனாவும், புகைப்படமும், நாம் விரும்பி வாங்கிக் கொண்டால், அந்த உறவு கடைசிவரை நம்முடன் இருக்காது என்ற பழமொழியை அனுபவப் பூர்வமாக உணர்ந்ததாலோ என்னவோ, மிகப் பிடித்தவர்களிடமிருந்து மட்டும் நிழற்படங்களை வாங்குவதுமில்லை / சேர்ந்து எடுப்பதுமில்லை. அதற்கு மாறாக அவர்களிடமிருந்து போட்டோக்களை திருடிவிடுவது தான் வழக்கம். அன்பான, வெறுப்பான, கோரமான சூழல்களை சந்திக்கும்போதெல்லாம் ஒரு சின்ன இளைப்பாரலைத் தருவது, பர்ஸில் வைத்துக் கொண்டிருந்த அந்த திருடப்பட்ட நிழற்படங்கள் தான்.

நமக்கு வயதாக, வயதாக, புகைப்படத்திற்கு மட்டும் அழகு கூடிக்கொண்டே போகிறது. இப்படி கடந்த காலங்களை மட்டும், நிழற்படங்கள் கூடுதல் அழகாகக் காட்டிக்கொண்டிருப்பதன் மர்மம் மட்டும் புரியவேயில்லை. இதுவரை பிரிவு உபச்சார தினங்களில், யாருடனும்,சேர்ந்து போட்டோ எடுத்ததேயில்லை. "இதெல்லாம் ரொம்ப ஓவர்" என்ற நண்பர்களின் வார்த்தைக்கு பயந்தே, தனிப்பட்ட பிரியங்களை கூற முடியாமல், தன்னிச்சையாக சுய முடிவு எடுக்க முடியாமல் தவித்ததை, மனதிற்குள் அழுத்துகின்றன நிறைய புகைப்படங்கள்.

"மிஸ்ஸிங்" என்பதுதான் புகைப்படத்தின் உயிர்நாடி போலும். வாழ்கையின் சந்தோஷங்கள், உறவுகள், உணர்வுகள், பிரியங்களையெல்லாம் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டு, மிஸ்ஸிங்கை மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறது எல்லாப் புகைப்படங்களும்.


( பூபாளத்தை அசைபோடும் முகாரி ராகம் இன்னும் நீளும் )

Sunday, February 10, 2013

என் பார்வையில் விஸ்வரூபம்






விஸ்வரூபம் பார்த்தேன். படத்தை பார்த்து முடித்தவுடன், கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் நடந்த எல்லாக் கேலிக் கூத்துகளையும் ( தமிழ் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு, தமிழக அரசின் தடை, நீதிமன்ற தீர்ப்பு ) நினைத்து சிரிப்புதான் வந்தது. அமெரிக்க - ஆப்கான் பிரச்சனையை சார்ந்த உலக தீவிரவாதத்தை பற்றி அலசும் ஒரு சிறிய முயற்சி தான் படத்தின் கதையே. கதைக் களத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள், திரையில் காட்சியாக்கப்பட்ட விதங்கள், கதாபாத்திரத் தேர்வு, ஒளிப்பதிவு, தொழில்நுட்பத் தரம் என ஒவ்வொரு காட்சியமைப்பிலும் கமலின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஆப்கானிஸ்தானின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்ட விதம் தான் மிகவும் கொள்ளை கொண்டது. ஆப்கான் ஜிகாதி, நடனக் கலைஞர் கதாபாத்திரங்களுக்கு கமல் மிகக் கச்சிதப் பொருத்தம். எப்போதும், திரை முழுவதும் வியாபித்திருக்கும் கமல், இதில் தனது ஆளுமைகளை குறைத்து, மற்ற கதாபாத்திரங்களும் நடிப்பதற்கு இடம் கொடுத்திருக்கிறார். தீவிரவாதப் படமென்றாலே ( சமீபத்திய உதாரணம் : துப்பாக்கி ), வில்லனை அழித்து, தீவிரவாதத்தையே ஜெயிப்பது போன்று காட்டப்படும், ஓவர் பில்டப்களை கிளைமேக்ஸாக வைக்கும் காமெடிகளை நல்லவேளை கமல் செய்யவில்லை. கதை சொல்லும் நேர்த்தி, அழுத்தமாகவோ, தெளிவாகவோ சொல்லப்படாததுதான் படத்தின் குறையே. புதிய கதைக்களத்தை / முயற்சிகளை தமிழ் சினிமாவுக்கு கொண்டுவர ஆர்வம் காட்டும் கமல், உலக தீவிரவாதம் பற்றி படமாக்கும்போது, நடுநிலை பார்வையோடு பதிவு செய்திருக்க வேண்டும். படத்தில் நிறைய குறைகள் இருந்தாலும், பிரமிப்பூட்டும் காட்சிப்படுத்தலின் தரமும், உழைப்பும் மிகவும் ஈர்க்க வைத்து விடுகின்றது. இதைப் போன்ற ஹாலிவூட் சாயலில் உள்ள தமிழ் ஆக்ஷன் படங்கள் / தமிழாக்கம் செய்யப்பட்ட ஹாலிவூட் ஆக்ஷன் படங்களைப் பார்ப்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் இருந்ததில்லை.எஸ்.ரா ரசிக்கும் மென்மையான உலக சினிமாக்கள் தமிழில் வராதா என்ற ஆசை எனக்கு உண்டு. அதற்கான வாசலை திறந்துவிட்டிருக்கிறது விஸ்வரூபம்.

நித்யா = நான்






"தாரே ஜாமீன் பர்ரின்" கவனச் சிதறல் பையனான "இஷான்" கதாபாத்திரத்திற்குப் பின், என்னை பற்றி நானே உணரமுடிந்த கதாபாத்திரம் "நித்யா" தான். மயிலிறகு கூர்மைகளில், மை நிரப்பி, சிலாகித்து எழுத விரும்புகின்றேன்.

"எப்பவும், எந்த நிலையிலும், பிடித்தவர்கள் தன் கூடவே இருக்க வேண்டும்" என்ற மனநிலை, சண்டையிட்ட காலத்தை மறக்க வைக்கின்ற "அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி, இந்தப் பார்வை வேறடி" ரக சின்ன சின்ன திடீர் சந்தோஷங்கள், "அவ அப்செட் ஆகுற மாதிரி ஏதாவது சொன்னா, சாரி கேட்டதுக்கு அப்புறம் கூட சண்டை போடுவா" என்ற வைராக்கிய குணம், "எனக்காக சந்தோஷமா இருக்குற மாதிரி அட்லீஸ்ட் நடிக்கலாம்ல" என்று பிடித்தவர்களின் அன்பை தன்னிலைக்கேற்ப தேடுவது, "ஒரு பொண்ணு சிரிச்சா அதை லவ்வுன்னு நினைக்கிற பசங்கள்ல ஒருத்தனா நீ" என்ற சமகால பளீர் சிந்தனை, "வேற ஏதும் சொல்லாத வருண், போகாதன்னு மட்டும் சொல்லு வருண்" என வாக்குவாதத்திற்க்குள்ளும் ஒளிந்திருக்கின்ற அன்பு, காயப்படுத்திய சுடு சொற்களுக்காக, பழகியதை யோசிக்காமல் உறவையே தூக்கி எறிவது, "எனக்குப் பிடிச்சிருக்கு. நாம ஒண்ணா இருக்க முடியுது.என்னைப் பொறுத்தவரைக்கும் இது குவாலிட்டி டைம். அப்புறம் வாழ்கையில முதல் தடவை ஒரு ரெட் சிக்னல் ட்ராபிக் ஜாம்ல வெயிட் பண்ண எனக்குப் பிடிச்சிருக்கு" என்று ரசித்து, ரசித்து நிகழ்கால வாழ்கையை தேர்ந்தெடுத்து பயணம் செய்வதில் உள்ள ஆர்வம், "எனக்கும் ஒன்னும் ப்ராப்ளெம் இல்லை. யார்கூட இருக்குறேங்குறது தான் எனக்கு முக்கியம்", "இங்க உட்காரட்டும்" என்று பிடித்தவர்கள்கூட இருக்கும்போது ஏற்படும் ஓர் மன உணர்வு, "எனக்கு என்ன பிடிக்கும்ன்னு எனக்கே தெரியலை. Actually எனக்கு தெரியும் ஒரேயொரு விஷயம். "நீ". உன்னை பாக்கணும், உன்கூட இருக்கணும் daily. அவ்வளவு தான் என் மனசுல எப்போதுமே. அதை விட்டா வேற எதுவுமே இல்லை.அதான் உண்மை", "ஐ மிஸ் யு வருண், என்ன பண்ணப் போறேன்னே தெரியலை", "நீ இருப்பீல்ல. அதனால கோச்சிங் சேர்ந்திருப்பேன்", "8 நாள் கழிச்சு மீட் பண்றோம். 1 Hour ல நீ போயிடுவ" என பல காட்சிகளில் வருகின்ற, பழகிட்டு விடவே முடியாத மனசு, "வருண், முன்ன மாதிரி என்கிட்டே பேசுறதே இல்லை" என ஒவ்வொரு நிமிஷங்களிலும், ஏதோவொரு தேடல்களில் கலங்கித் தவிப்பது, "நீ கேட் எக்ஸாம் எழுதி முடிச்சதுல எனக்குத் தான் நிறைய சந்தோஷம். Back to normal now varun. எப்படி இருந்தோமோ அப்படி இருக்கணும் எனக்கு" என்று பிடித்தவர்கள் நம்மை விட்டு தூரமாக செல்லும்போது, ஏற்படும் கிறுக்குத்தன அன்பு, "என்னை விட்டுடு.ஏன்னா என்னால அது முடியாது" என எடுக்கும் திடீர் கோப முடிவு, "ஆனா அன்னைக்கே இமெயில் அனுப்பியிருந்தா நல்லா இருந்திருக்கும்.உன் மனசுல இருந்து வந்த வார்த்தைகளா இருந்திருக்கும். இப்போ படிக்கும்போது நல்லா புக் படிக்கிற மாதிரி இருந்தது" என்று ரசனையோடு நியாயம் பேசுவது, "செல்லச் சண்டை போடுகிறாள், தள்ளி நின்று தேடுகிறாள், கண்ணை மூடி தூங்குவதைப் போல் நடிப்பது, எந்தன் குரல் கேட்கத்தானடி" என்ற வரிகளில் காட்டும் பாவனைகள் சொல்லும் சேதிகள் , அன்போடு திரும்ப வரும் உறவுகளை , "அந்தக் குட்டி குட்டி பாக்ஸை டிக் பண்ணிட்டியா ? அடுத்த பாக்ஸ் நானா" என்று கேள்வி கேட்டு, அன்பில் செய்த ஆயுதங்களால் காயப்படுத்துவது, "முடியலைல, சத்தம் போடாம, சண்டை போடாம, பதிலுக்கு பதில் சொல்லாம இருக்க முடியலைல" என்று கோபத்தில், செய்வதறியாமல் தன்னிலை தடுமாறி, எந்தவொரு உறவையும் உதறிச் செல்வது, எந்தவொரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போது, பிடித்தவர்களை நினைக்க வைக்கும் ஏதாவதொரு தருணம், பிடித்த உறவுகளே, அந்த ரிலேஷன்ஷிப்பை முடிவுக்கு கொண்டுவரும்போது, வெளிப்படுத்தும் அதீத அன்பின் வெளிப்பாடுகள் / மணமேடையில் நிற்கமுடியாமல் தடுமாறுவது, சற்று முன்பு பாடலில் பார்க்குமிடத்திலெல்லாம் கடந்துபோன பழகிய இடங்களை நினைத்துக் கொண்டிருப்பது என்று எனக்குள் இருந்த பல கேரக்டர்களை, என் கண் முன்னே நுணுக்கமாக காட்டியவள் நித்யா கதாபாத்திரம். நித்யாவிற்கு, விகடனால் கொடுக்கப்பட்ட இந்த விருது, எனக்கே கொடுக்கப்பட்டது போல் இருக்கிறது.

Sunday, January 20, 2013

"பூபாளமும் முகாரியும்" தொடர் - 2 / எழுதுபவர் - அலெக்ஸ்

"ராஜா அண்ணா, எனக்கு ரெண்டு நாளு லீவே... உங்களுக்கு எத்தனை நாளு லீவு?" என்று கேட்டுக் கொண்டிருந்தேன், ஸ்கூல் பெல் அடித்ததும், அரைக் கிளாசில் இருந்து, முத ஆளா ஓடிவந்த நான்.

"சனி, ஞாயிற்றுக் கிழமைன்னா எங்களுக்கும் லீவு தான்டா" என்று சொல்லிக்கொண்டே, தெருவில் உள்ள எல்லா குழந்தைகளையும் விளையாட்டுக்குச் சேர்க்க ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான் ராஜா அண்ணன். "கள்ளன் போலிஸ் விளையாட்டுன்னா நாங்க வர்றோம். இல்லைன்னா நாங்க விளாட்டுக்கு வரலை" என்று கழண்டு கொண்டது மற்றொரு குரூப். "சரி சரி, கல்லா மண்ணா விளையாட்டை ஆரம்பிக்கும்போது சொல்லுங்க. நானும் சாப்பிட்டிட்டு வந்துடுறேன்" என்றபடியே தோளில் மாட்டியிருந்த பேக்கை வீட்டுக்குள் வீசி எறிந்தேன். விளையாட்டை ஆரம்பிச்சிடுவாங்களேன்னு அவசர அவசரமாக, பழைய சோறையும், கத்தரிக்காய் குழம்பையும் குழைத்து அடித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு குரல் வெளியே இருந்து வந்தது "டேய் அலெக்ஸ், விளையாட்டை ஆரம்பிச்சுட்டோம். இப்போ நீ வரலைன்னா, அடுத்த ஆட்டைக்குத் தான் உன்னைய சேர்ப்போம்". பாதி சோறை திங்காம, விளையாடுவதற்கு கடகடன்னு ஓடியது இன்னும் நினைவிருக்கிறது. தினமும் நாலு வாட்டி சாப்பிடுற புள்ளை, இன்னிக்கு சாப்பிடலையேன்னு திட்டிக் கொண்டிருந்தார் அம்மா. வெயிலில் எவ்வளவு விளையாடினாலும் சலிக்கவே சலிக்காது. விளையாட்டுக்கள் போரடிக்காதவரை, விடுமுறை நாட்களும் போரடித்ததில்லை.

இப்போதுள்ள மாதிரி, அப்போதுமே எனக்கு வேலை செய்வது பிடிக்காத ஒன்று. தீக்குச்சிகளை கட்டைகளில் அடுக்குவது தான் எங்கள் தொழிலே.வசதியில்லாத குழந்தைகள், முழு நேரமும் விளையாடக்கூட முடியாமல், சிக்கித் தவித்த கொடுமையான வசந்த காலம் அது. " கடைக்குப் போய் காய்கறி, சர்பத் வாங்கிட்டு வருவது "என ஊர் சுற்றும் வேலைகளுக்கு முத ஆளா ஓடிவிடுவதுதான் எனக்கு கைதேர்ந்த கலையே. இந்த கைவந்த கலைகளால், தீக்குச்சியால் கட்டை அடுக்கும் வேலைகளுக்கு நான் டிமிக்கி கொடுத்து, தப்பித்துவிடுவேன். "கட்டை அடுக்கனும்ன்னாலே இவனுக்கு கரி வலிக்கும்" என்பார் அம்மா.

ஞாயிறு என்றாலே வீட்டில் சில விசேஷங்கள் நிறைந்திருக்கும். ஒன்று, சனிக்கிழமை இரவில் ஆட்டுக்கல்லில் ஆட்டிவைத்த மாவை, தோசைக்கு போடுவார்கள். இரண்டு, வீட்டில் வளர்த்துக் கொண்டிருந்த புறாவை சமைத்துவிடுவார்கள். சர்ச்க்கு போவதும், சண்டே கிளாஸ் முடிந்துதான் வீடு திரும்புவதும், பள்ளியில் கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. சேட்டை பண்ணாமல், அமைதியா இருக்குற பிள்ளைகளுக்கு "நல்லவன்" என்ற பெயரை மிக எளிதில் கொடுத்துவிடுவார்கள் பள்ளிக்கூடத்திலும், சர்ச்சிலும்.

நெஞ்சுல டிசைன் வைத்து அயர்ன் பண்ணிய சட்டையும், பெல்பாட்டம் பேன்ட்டும், வெள்ளைக் கலர் பெல்ட்டும் போட்டுக்கொண்டு, மிட்டாய்க் கடையில் வேலை செய்யும் இளவட்டங்களும், பலசரக்கு மளிகைக் கடை அண்ணன்களும் அன்றுதான் ஜொலி ஜொலிப்பார்கள். பக்கத்து வீட்டு முருகன் அண்ணன், ரெண்டு ஸ்பீக்கர் வச்சுக்கிட்டு, "என் ஜீவன் பாடுதுன்னு" சோகப்பாட்டா போட்டு, யாருக்கோ சேதி சொல்லிக்கிட்டு கொண்டிருந்தான். தங்க ரதம் அக்காவை பார்ப்பதற்காகவே, தலையை உச்சி எடுத்து சீவி, ஜெமினி கணேசன் மாதிரி சுருட்டை முடியில், சைக்கிளில் அங்கிட்டும், இங்கிட்டுமாக எங்கள் தெருவை சுத்திக் கொண்டிருந்தார் வடைக்கார சீனி அண்ணன்.

பக்கத்து வீட்டுக்காரி, தன் வீட்டு முற்றத்தில் சாக்கடையை தள்ளி விட்டதற்காக, அவரை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தது பாட்டி. மாலை வெயிலில், "கனகாம்பரம், பிச்சிப் பூ, மல்லீப் பூ" எனக் கத்திக் கொண்டிருக்கும் பூக்காரரிடம், பேரம் பேசிக் கொண்டிருந்தாள் மேரியக்கா. உதிரிப் பூக்களை வாங்கி, சொளவுல பரப்பி, திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, ஊசி நூலை வைத்து கோர்த்துக் கொண்டிருந்தாள். வழக்கம்போல அடுத்த வீட்டு புரணி பேசுவதிலேயே, அந்த நாளும் கழிந்து கொண்டிருந்தது அன்னபூரணி அக்காவுக்கு.

"இன்னிக்கு என்ன படம் போடுறாங்க டி.வில ன்னு" கேட்டுக்கிட்டே, பக்கத்து வீட்டுக்குள்ள நுழைந்தார் சேர்மத் தாயி. "கணேசனின் பாலும் பழமும்" என்று பக்கத்து வீட்டுக்காரர் பதில் சொல்ல, விமர்சனங்களால் களேபரமானது அந்தத் திண்ணை. இதெல்லாம் ஒட்டுக்கேட்டுக் கொண்டே. நாங்கள் "சா பூ த்ரீ" விளையாட்டுக்கு தாவிட்டோம். ஆட்டைக்கு சேர்க்கப்படாத மற்ற பிள்ளைங்க தனி குரூப் சேர்த்துக்கிட்டு, "ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்தது" விளையாட்டை விளையாட ஆரம்பித்தனர். ரோட்டுல விக்கிற ஜவ்வு மிட்டாய், குச்சி ஐஸ், அவல் என எதையும் விடுவதேயில்லை.

வளையல்கார பாட்டிகளுக்கு அன்று தான் வசூல் தினம் வேறு. "புதுப் புது வளையல்களை போட்டுப் பார்த்து அழகா இருக்கா" எனக் கேட்டு கேட்டு திருப்தி படாமல் இருப்பார்கள் சில பெண்கள். சட்டை , வேஷ்டி விற்பனைக்காக ஜவுளிக்கடைக்காரர்கள் சைக்கிளில் ஊருக்குள் வருவார்கள். வாழ்க்கையை வரம் வாங்கி வந்தது போல சிலிர்க்க ஆரம்பித்தது. இரண்டு நாட்கள் விடுமுறை, இரண்டே நொடிகளில் கடந்து போனதாய், நம்மை முழுமையாக திருப்திப்படுத்தாமல் சென்றுவிட்டதாய் அடுத்த நாளில் உணரப்படும்.

"பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கியா நீ" என்று நேற்றைக்கு முந்தின நாள் ஒரு பள்ளி நண்பனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. " இல்லைடா, நாலு நாள் லீவுல, இரண்டு நாள் வேலைக்கு வரச் சொல்லி இருக்காங்க" என்றேன் நான். "ஹ்ம்ம். எனக்கும் ரெண்டு நாள் வேலைதாண்டா, நல்ல நாளைக்கு கூட ஊருக்கு போக முடியலை, குடும்பத்தோட சேர்ந்து இருக்க முடியலை" என்று பெருமூச்சு விட்டான் நண்பன்.

"எப்படி இருந்த நாம், இப்படி ஆயிட்டோம் " என்றேன். பதில்கள் ஏதுமில்லை அவனிடம்


( பூபாளத்தை அசைபோடும் முகாரி ராகம் இன்னும் நீளும் )

Sunday, December 16, 2012

என் பார்வையில் நீதானே என் பொன்வசந்தம்

இனி நினைவெல்லாம் நித்யா கேரெக்டர் தான். காதல்ங்கறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி ( NKPK ), லாஜிக்கெல்லாம் யோசிக்காது போல. என் மூளை இந்தப் படத்தின் லாஜிக் ஓட்டைகளை / நிறைய குறைகளை யோசித்தாலும், மனது பல இடங்களில் இந்தப் படத்தை ரசித்துவிட்டதால் பிடித்துப் போன சினிமா இது. வாழ்க்கையின் எந்தவொரு நிலையிலும், பிரியக்கூடாது என ஒருவர் மாற்றி ஒருவர் அவரவருக்கு தகுந்த சூழல்களில் முடிவெடுப்பதால், ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளுக்குள் உள்ள காதல் தான் கதையே. வருண்க்கு சரிசமமாக, அதிக காதலும், அதிக வெறுப்பையும் காட்டும் நித்யா கேரெக்டர் அதிகம் கொள்ளை கொண்டது. "என் மேல இவ்வளவு காதல் வைக்காதே. அப்புறம் என்னை வெறுத்துடுவ நித்யா" என்று வருண், நித்யாவிடம் சொல்வது,  "சிரிச்சுப் பொண்ணுங்க ஒருத்தன்கிட்ட பேசினாலே, காதல்ன்னு நினைக்கிற பையன்களில் நீயும் ஒருத்தனா வருண்" என்று நித்யா வருணிடம் கேட்பது ...... என இன்னும் மறந்துபோன நிறைய நுணுக்கமான டயலாக்குகள் ( சந்தானம் டயலாக்குகள் அல்ல ) தான், படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தன. பாடல்களில் "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" ரக "காற்றைக் கொஞ்சம்" படமாக்கப்பட்ட விதமும், "சாய்ந்து சாய்ந்து" பாடலும் தான், காட்சிகளுடன் ஒன்றிப் போகிறது. "ஒமணப் பெண்ணேவை" சொதப்பியது போல, "என்னோடு வா வா" பாடலையும் சொதப்பிவிட்டார்கள். மிகவும் எதிர்பார்த்த இளையராஜாவின் பின்னணி இசையே படத்தில் இல்லாததும், வி.டி.வி யில் இருந்த அழகான ஒளிப்பதிவு இல்லாததும்  படத்தின் மிகப்பெரும் தொய்வு. கல்யாணத்திற்கு முந்திய நாள், வருண் நித்யாவுடன் போகும்போது, படபடக்கும் மனநிலைகளுக்கு நடுவே, "பழகிய பழைய நினைவுகள் ஒவ்வொரு சாலைகளிலும் கடந்து செல்வது போல வரும் சில பிரேம்கள்" மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும், ஏங்க வைத்த காட்சிகள். இன்னும் கொஞ்சம் எடிட் செய்து, அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் "அலைபாயுதே" போல இருந்திருக்கக் கூடும். ட்ரைலரில் இருந்த அழகியல் நிறைந்த காட்சிகள், படத்தில் கோர்வையாக வராததால் யானைப் பசி கொண்ட எனக்கு சோளப்பொறி தான். இந்தப் படத்திற்கு, இணையம் முதல் டீக்கடை வரை உள்ள அனைவரும் காட்டும் அதிக வெறுப்பு விமர்சனங்களை, "துப்பாக்கி" படத்திற்கு கொஞ்சம் காட்டியிருந்தால் கூட, "முஸ்லிம்கள்" பற்றிய தவறான எண்ணத்தையாவது மாற்றியிருக்கக்கூடும்.

Saturday, December 8, 2012

"பூபாளமும் முகாரியும்" தொடர் - 1 / எழுதுபவர் - அலெக்ஸ்

எழுத எப்படி ஆரம்பிப்பது என்று, படுத்துக்கொண்டே நினைவுகளைப் புரட்டும்போது, "எனது பேஸ்புக் Profile Picture யின் நிஜ மனுஷிகள் எல்லாம் ரீவைண்டில் ஓட, ஓட, அந்த எல்.கே.ஜி படித்த குழந்தைப்பருவத்திற்க்கே சென்றுவிட்டேன். எழுத எழுத, கண்முன்னே காட்சிகள் விரிவதைப் போல, அப்போது பூமியின் ஒவ்வொரு அசைவும், மனக்கண்ணின் முன்பு , அழகாக பரந்து விரிந்து கொண்டிருந்தது. புதிது புதிதாய் ரசிப்பதற்கு அந்த உலகத்தில் ஏதாவது ஒன்று பிறந்து கொண்டே இருந்தன. சிக்கல்களும், காயங்களும் பார்த்திராத உலகத்தில், காண்பவையனைத்தும் எல்லைகளேயில்லாமல் விரிவடைந்து கொண்டிருந்தன. அலாரமே இல்லாத காலத்தில், அப்போதெல்லாம் காலை ஆறுமணிக்கு தூங்கி எழுந்திருப்பதில் எந்தச் சிக்கலுமே இருந்ததில்லை. "பணியாரப் பாட்டிகளும், ஆமை வடை போடுற அண்ணனும் வந்தா தான் இவனுக்கு காப்பியே உள்ள இறங்கும்" என அம்மாவின் குரல் அடுப்படியில் இருந்து கேட்கும். டி.வி க்களும், ரேடியோக்களும், போனும் இல்லாத வீட்டில், "அதலைக்காய்" வதக்கியபடி, வயலுக்கு போக தயாராக இருப்பார் ஆச்சி. வழக்கம்போல அப்போதும் திங்கள் கிழமைன்னாலே கடுப்புதான். "ஸ்கூல்க்கு போகணும் ரெடியாகு", "போன வருஷமெல்லாம், இதே நேரம் நீ குண்டாயிருந்த, இப்போ சாப்பிடவே மாட்டேங்க" , "மஞ்சளை தொட்டுராத. அப்புறம் பெரிய ஆளாகும்போது உனக்கு மீசை முளைக்காது" என்றெல்லாம் சொல்லிக்கிட்டே என்னைக் குளிக்க ஊத்திக்கிட்டு இருந்தார் அம்மா. மனக் கண்முன்னே பரந்து விரியும் உலகிற்க்கெல்லாம் முட்டுக்கட்டை போட, "பள்ளி" என்ற சிறைக்குள் அடைத்துவைக்க ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தனர். தலைவாரி, பொட்டு வச்சு, கண் மை வச்சு, "அப்போதைய பக்கத்து வீட்டு பொண்ணுக்கு" போட்டியா, நானும் "ராமராஜன் மேக்கப்ல" பள்ளிக்கூடத்துக்கு போவேன். அப்போதைய பக்கத்து வீட்டுப் பொண்ணு , ஸ்கூல்க்கு லீவ் போட்டா, நானும் ஸ்கூல்க்கு போக மாட்டேன்னு அடம்பிடித்த காலங்களும் எனக்கு உண்டு. "உங்க பையன் மதியம் தூங்கவே மாட்டேங்குறான், தூங்குற பிள்ளைங்க எல்லாரையும் கிள்ளி வைக்குறான், ஊமைக் குசும்பு நிறைய பண்றான்" என்று அடுக்கடுக்கான புகார்களை, எல்.கே.ஜி டீச்சர், அம்மாவிடம் சொல்ல, "கரகாட்டக்காரன் செந்தில் மாதிரி" சோகமா நின்னுக்கிட்டு இருந்தேன். அதற்குப்பின் அதிகம் பயப்பட ஆரம்பித்த என்னை, எல்.கே.ஜி டீச்சர்கள் வேறுவிதமாக ( யாராவது ஒன்னுக்கு / ரெண்டுக்கு போயிட்டா, அவங்க வீடு ரொம்பப் பக்கத்துல இருந்தா, அவங்க வீட்ல போயி ஆளைக் கூட்டிட்டு வரச் சொல்ல என்னை) பயன்படுத்திக் கொண்டனர். பெல் அடிச்சவுடனே, வீட்டுக்கு கிளம்புற முத ஆட்களில் நானும் இருப்பேன். பள்ளிக்கூடம் தவிர , வெளிய எங்க போனாலும் "மாயி" மாதிரி தரையில உட்காராம, ஒரு கூடைல "தோசைக்கல்லை" எடுத்துட்டுப் போயி, அதைக் கீழே போட்டு, அதன் மேலே தான் உட்காருவேன். "சுர்ருன்னு" எங்கையாவது சத்தம் கேட்டா, "ஐ ! தோசைன்னு" தோசைக்கல்லோடு, அந்த வீட்டுக்கு ஓடுவேன். டயர் / பனம்பழ பூந்தலில் செய்த வண்டி உருட்டுவது, திண்ணையில் ஊர்ந்து செல்லும் எறும்புக்கு ஆட்டுப் புழுக்கையை உணவாக போடுவது, சோப்பு நுரை பாட்டில் ஊதுவது, நிலா வெளிச்ச கூட்டாஞ் சோறு, பக்கத்து வீட்டு குழந்தைகளோடு ஒரே திண்ணையில் படுத்துறங்கும் தூக்கம், "என் கூட சேக்கா / டூவா? ", "அவன் அவுட், ஆட்டைக்கு அவனை மறுபடி சேர்க்காத" என எத்தனை எத்தனை வார்த்தைகள், ஞாபகங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. இயந்திர வாழ்கையின் கோரச் சூழலிருந்து தப்பிக்க, இப்படியான ஞாபகங்களைக் கிளரும் இதமான நினைவுகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர்.



( பூபாளத்தை அசைபோடும் முகாரி ராகம் இன்னும் நீளும் )